எங்களைப் பற்றி
     இன்றைய உலகில் இன்றியமையாத ஒன்றாக திகழ்வது யாதெனில் கல்வியே ஆகும். எந்தவொரு சமூகத்தினரும் இக்கல்வியைக் கற்பதிலிருந்து விலகிச் செல்வது இன்றைய நவீன உலகில் மிகவும் அரிதாகக் காணப்படுகிறது. ஏனெனில் கல்வியின் சிறப்பை அனைத்து சமூகங்களும் புரிந்துள்ளன. இதனால் தான் இன்று கல்வியானது மனிதனின் தேவையாக இருக்கிறது. கல்வியின் சிறப்புப் பற்றி கூறும்போது கல்வி கற்றவன் எந்த இடத்திற்குச் சென்றாலும் அவன் பிற சமூகத்தால் மதிக்கப்படுகின்றான். இதற்குக் காரணம் அவன் கற்ற கல்வியே ஆகும்.

     கல்விக்கும் நமது இஸ்லாமிய மக்களுக்கும் உள்ள தொடர்பு தற்பொழுது எந்தளவில் உள்ளது என்பதை கணக்கிட்டால் நிச்சயமாக பூமிக்கும், சூரியனுக்குமுள்ள தூரத்தைவிட அதிகம் என்றே கருதவேண்டியுள்ளது.

     தொலைந்த பொருளை தேடுவது போல் வாழ்க்கையில் கல்வியை தேடிக்கொண்டே இருங்கள் என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

     கல்வியின் முக்கியத்துவத்தையும், கற்பதின் அவசியத்தையும் இவ்வளவு சிறப்பாக நாயகம்(ஸல்) அவர்களை தவிர வேறு யாராலும் சொல்ல முடியாது அன்பர்களே.

     மேலைநாட்டு கல்வியாளர் ஒருவர் அவருடைய பங்கிற்கு கல்விக்கு இவ்வாறு முக்கியத்துவம் தருகிறார் அதாவது இன்று நீ கல்வி கற்றுக் கொண்டு நாளை கற்பதை நிறுத்திவிட்டால், நாளை மறுநாள் நீ கல்வி கற்காதவனாகி விடுவாய்

     இங்கு கல்வி என குறிப்பிடப்படுவது நற்பயன்களை தரக்கூடிய அறிவை. அதாவது, அடிப்படைக் கல்வியான மார்க்க கல்வி, ஏட்டுக் கல்வி, அதனைத் தொடர்ந்து நம்மை நாம் மேம்படுத்திக் கொள்ளவும், அறிவைப் பெருக்கிக் கொள்ளவும் தொடர்ந்து நாம் கற்பது ஆகியவற்றையும் உள்ளடக்கியது என்பதை கருத்தில் கொள்ளவும்.

     அன்பர்களே! இஸ்லாம், கல்வியை ஆதரித்த அளவிற்கு உலகிலுள்ள வேறு எந்த கொள்கையும், கோட்பாடுகளும் கல்வியை ஆதரிக்கவில்லை என்பதுதான் வரலாறு. இந்த அடிப்படை அதிகாரத்தை நாம் தெளிவாக புரிந்து கொண்டோமா என்பதுதான் நமக்குள் இருக்கும் பெரிய தகராறு.

     இந்த சூழல்களை கருத்தில் கொண்டே கல்வியில் பின்தங்கியிருந்த நமதூர் முத்துப்பேட்டை மக்களுக்காக ஓர் சேவை மனப்பான்மையுடன் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பே முத்துப்பேட்டை கல்விப்பேரவை ஆகும்.

     குறிப்பு:- இது ஒரு சென்னை ரஹ்மத் அறக்கட்டளையின் அங்கமாகும்.